- நபி (ஸல்) அவர்களின் காலத்தில் பெண்கள் முகத்தைத் திறந்து இருந்ததற்கு பல சான்றுகள்:
நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் பெருநாள் தொழுகையில் கலந்து கொண்டேன் அப்போது அவர்கள் உரை நிகழ்த்துவதற்கு முன்பே தொழகை நடத்தினார்கள் பாங்கோ இகாமத்தோ இல்லை. பிறகு பிலால் (ரலி) அவர்கள் மீது சாய்ந்து கொண்டு இறையச்சத்தைக் கடைப்பிடிக்குமாறும் இறைவனுக்கும் இறைத்தூதருக்கும் கட்டுப்படுமாறும் வலியுறுத்தி மக்களுக்கு அறிவுரையும் நினைவூட்டலும் வழங்கினார்கள். பிறகு அங்கிருந்து புறப்பட்டு பெண்கள் பகுதிக்கு சென்று அவர்களுக்கும் நினைவூட்டி அறிவுரை பகர்ந்தார்கள். மேலும் பெண்களை நோக்கி தர்மம் செய்யுங்கள் நீங்கள் அதிகம் பேர் நரகத்தின் விறகு ஆவிர்கள் என்று கூறினார்கள். அப்போது பெண்கள் நடுவிலிருந்து கன்னங்கள் கருத்த ஒரு பெண்மனி எழுந்து ஏன் அல்லாஹ்வின் தூதரே என்று கேட்டார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நீங்கள் அதிகமாக குறை கூறுகின்றீர்கள். நன்றி மறந்து கணவனை நிராகரிக்கின்றீர்கள் என்று கூறினார்கள். அப்போது அப்பெண்கள் தம் காதனிகள் மோதிரங்கள் உள்ளிட்ட அணிகலன்கனை பிலால் (ரலி) அவர்களின் ஆடையில் போட்டார்கள். அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி)நூல்: முஸ்லிம் (1612)
கண்ணங்கள் கருத்த பெண்மனி என்று ஜாபிர் (ரலி) அவர்கள் குறிப்பிடுவதாக இருந்தால் அப்பெண்ணின் முகம் திறந்திருந்தாலே இது சாத்தியம்.பெண்கள் முகத்தை மறைப்பது கட்டாயமாக இருந்திருந்தால் நபி (ஸல்) அவர்களுக்கு முன்னிலையில் நபித்தோழியர்கள் முகத்தைத் திறந்திருக்க மாட்டார்கள். நபி (ஸல்) அவர்களும் இதைக் கண்டிக்காமல் இருக்க மாட்டார்கள். பெண்கள் முகத்தை மறைக்க வேண்டியதில்லை என்பதாலே இதை நபி (ஸல்) அவர்கள் கண்டிக்கவில்லை.
('விடைபெறும்' ஹஜ்ஜின்போது) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (என் சகோதரர்) ஃபள்ல் பின் அப்பாஸைத் தமக்குப் பின்னால் வாகனத்தில் அமர்த்திக் கொண்டார்கள். ஃபள்ல் மிகவும் அழகானவராயிருந்தார். அப்போது நபி (ஸல்) அவர்கள் மக்களுக்கு மார்க்க விளக்கம் அüப்பதற்காகத் தமது வாகனத்தை நிறுத்தியிருந்தார்கள். (அப்போது) 'கஸ்அம்' குலத்தைச் சேர்ந்த அழகான பெண்ணொருத்தி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் மார்க்க விளக்கம் கேட்டு வந்தார். அப்போது ஃபள்ல் அப்பெண்ணைக் கூர்ந்து நோக்கலானார். அந்தப் பெண்ணின் அழகு அவருக்கு ஆச்சரியத்தை ஊட்டியது. நபி (ஸல்) அவர்கள் திரும்பிப் பார்த்த போது ஃபள்ல் அப்பெண்ணைக் கூர்ந்து பார்ப்பதைக் கண்டார்கள். உடனே ஃபள்லின் முகவாயைத் தமது கரத்தால் பிடித்து அப்பெண்ணைப் பார்க்க விடாமல் அவரது முகத்தைத் திருப்பி விட்டார்கள்.அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)நூல் : புகாரி (6228)
அழகான பெண் நபி (ஸல்) அவர்களிடம் வந்தார் எனக் கூறுவதாக இருந்தால் அப்பெண்ணின் முகம் திறந்திருந்தாலே இது சாத்தியம். நபியவர்களிடம் வந்த பெண்ணை ஃபள்ல் (ரலி) அவர்கள் கூர்ந்து பார்த்தார்கள் என்றும் இந்த ஹதீஸ் கூறுகின்றது.
இந்நேரத்தில் நபி (ஸல்) அவர்கள் ஃபள்ல் (ரலி) அவர்களின் முகத்தைத் திருப்பி விடுகிறார்களே தவிர முகத்தை மூடிக்கொள்ளுமாறு அப்பெண்ணுக்கு நபியவர்கள் உத்தரவு போடவில்லை. எனவே பெண்கள் முகத்தை மூட வேண்டியதில்லை என்பதை இந்தச் செய்தி தெள்ளத் தெளிவாக கூறுகின்றது.
உபைதுல்லாஹ் பின் அப்தில்லாஹ் (ரஹ்) அவர்கள் கூறினார்கள் :என் தந்தை அப்துல்லாஹ் பின் உத்பா அவர்கள், உமர் பின் அப்தில்லாஹ் பின் அர்கம் அஸ்ஸுஹ்ரீ அவர்களுக்கு கடிதம் எழுதினார்கள். அதில் சுபைஆ பின்த் ஹாரிஸ் அல் அஸ்லமிய்யா (ரலி) அவர்களிடம் சென்று, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சுபைஆ மார்க்கத் தீர்ப்பு கேட்டது பற்றியும், அதற்கு அவர்கள் அளித்த பதில் பற்றியும் கேட்டு எழுதுமாறு பணித்திருந்தார்கள். (அதன்படி, சுபைஆ ரலி அவர்கüடம் சென்று) உமர் பின் அப்தில்லாஹ் அவர்கள் (கேட்டறிந்து என் தந்தை) அப்துல்லாஹ் பின் உத்பா அவர்களுக்கு(ப் பின்வருமாறு பதில்) செய்தி அனுப்பினார்கள்:
சுபைஆ பின்த் அல்ஹாரிஸ் அவர்கள் 'பனூ ஆமிர் பின் லுஅய்' குலத்தைச் சேர்ந்த சஅத் பின் கவ்லா (ரலி) அவர்களுக்கு வாழ்க்கைப்பட்டிருந்தார். சஅத் (ரலி) அவர்கள் பத்ருப் போரில் கலந்து கொண்டவராவார். 'விடைபெறும் ஹஜ்ஜின் போது சஅத் (ரலி) அவர்கள் இறந்து விட்டார்கள். அப்போது 'சுபைஆ' கர்ப்பமுற்றிருந்தார். சஅத் அவர்கள் இறந்து நீண்ட நாட்கள் ஆகியிருக்கவில்லை; (அதற்குள்) சுபைஆ பிரசவித்து விட்டார். (பிரசவத்திற்குப் பின் ஏற்படும்) உதிரப்போக்கிலிருந்து சுபைஆ அவர்கள் சுத்தமான போது, பெண் பேச வருபவர்களுக்காகத் தன்னை அலங்கரித்துக் கொண்டார். அப்போது, பனூ அப்தித் தார் குலத்தில் ஒருவரான 'அபுஸ் ஸனாபில் பின் பஅக்கக்' (ரலி) அவர்கள் சுபைஆ அவர்களிடம் வந்து, ''திருமணம் புரியும் ஆசையில் பெண் பேச வருபவர்களுக்காக உங்களை நீங்கள் அலங்கரித்திருப்பதை நான் காண்கின்றேன். அல்லாஹ்வின் மீதாணையாக! (கணவன் இறந்த ஒரு பெண் அவனது இறப்புக்குப் பின் இருக்க வேண்டிய 'இத்தா' காலமாகிய) நான்கு மாதம் பத்து நாட்கள் முடியும் வரையில் நீங்கள் (மறு)மணம் புரிந்து கொள்ள முடியாது'' என்று கூறினார்கள். சுபைஆ (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: இதை அபுஸ்ஸனாபில் என்னிடம் சொன்னதையடுத்து நான் மாலை நேரத்தில் எனது உடையை உடுத்திக் கொண்டு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்றேன். அப்போது நபி (ஸல்) அவர்களிடத்தில் இது பற்றிக் கேட்டேன். அதற்கு, 'நீ பிரசவித்து விட்ட போதே (மணம் புரிந்து கொள்ள) அனுமதிக்கப்பட்டவளாக ஆகிவிட்டாய். நீ விரும்பினால் (மறு)மணம் செய்துகொள்' என்று நபி (ஸல்) அவர்கள் மார்க்கத் தீர்ப்பு வழங்கினார்கள்.புகாரி (3991)
இந்தச் செய்தியில் சுபைஆ (ரலி) அவர்கள் அலங்காரம் செய்திருந்தார் என்று பொதுவாகக் கூறப்பட்டுள்ளது. அவர்கள் எந்த அலங்காரம் செய்திருந்தார்கள் என்பதை அஹ்மதில் இடம்பெற்றுள்ள அறிவிப்புகள் தெளிவுபடுத்துகின்றன.
26166 26167 ஆகிய எண்களில் அஹ்மதில் பதிவாகியுள்ள அறிவிப்புகளில் சுபைஆ (ரலி) அவர்கள் கண்ணுக்கு சுர்மா இட்டிருந்ததாகவும் கையில் மருதாணி பூசியிருந்ததாகவும் இதை அந்நியரான அபுஸ்ஸனாபில் பார்த்துவிட்டு நபியவர்களிடம் கூறியதாவும் சொல்லப்பட்டுள்ளது. சுபைஆ (ரலி) அவர்கள் செய்ததை நபியவர்கள் கண்டிக்கவில்லை.
எனவே பெண் தனது முகத்தையும் தனது முன் கையையும் வெளிப்படுத்திக் கொள்ள இந்தச் செய்தி தெளிவான ஆதாரமாக அமைந்துள்ளது.
- முகத்தை மறைப்பதில் தவறில்லை :
பெண்கள் முகத்தை மறைப்பது கட்டாயம் இல்லை என்றே நாம் கூறுகின்றோம். அதே நேரத்தில் ஒரு பெண் தனது சுயவிருப்பத்தின் அடிப்படையில் தனது முகத்தை மறைத்துக் கொண்டால் அது மார்க்க அடிப்படையில் தவறல்ல.
நபி (ஸல்) அவர்களின் காலத்தில் சில பெண்கள் தங்கள் முகங்களை மறைத்துக் கொள்ளும் வழக்கமும் இருந்துள்ளது. அதை நபி (ஸல்) அவர்கள் தடை செய்யவில்லை.
இஹ்ராம் அணிந்த பெண் முகத்திரையை அணியக் கூடாது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி)நூல் : புகாரி (1838)
முகத்திரை அணியும் வழக்கம் நபி (ஸல்) அவர்களின் காலத்தில் இருந்ததால் இஹ்ராமின் போது மாத்திரம் அதை அணியக் கூடாது என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். எனவே இஹ்ராம் அணியாத மற்ற பெண்கள் முகத்திரை அணிவதற்குத் தடை இல்லை என்பதை இதிலிருந்து விளங்கிக் கொள்ளலாம்.
பெண்கள் முகத்தை மறைப்பது கட்டாயமில்லை என்பதும் இந்த ஹதீஸிலிருந்து விளங்குகிறது. ஏனென்றால் பெண்களின் முகம் மறைக்கப்பட வேண்டிய பகுதியாக இருந்தால் ஹஜ்ஜின் போது அதை வெளிப்படுத்த வேண்டும் என்று நபியவர்கள் உத்தரவிட மாட்டார்கள்.
பெண்கள் முகத்தை மறைப்பது மார்க்க அடிப்படையில் தவறில்லை என்றாலும் முகத்தை மறைப்பதால் தற்காலத்தில் ஏற்படும் தீமைகளையும் நமது கவனத்தில் கொள்ள வேண்டும்.ஆண்களாயினும், பெண்களாயினும் அவர்களில் இறைவனை அஞ்சி ஒழுக்கமாக வாழ்பவர்கள் மிகக் குறைவே! பெரும்பாலோர் ஒழுக்கத்துடன் நடந்து கொள்ள முக்கியக் காரணம் தமக்குத் தெரிந்த மனிதர்களிடம் தம் மதிப்புப் பாதிக்கப்படும் என்பது தான். இந்த அச்சத்தினாலேயே ஒழுக்கத்தைக் கடைப்பிடிக்கிறார்கள். உள்ளூரில் ஒழுக்கமாக நடப்பவர்கள் வெளியூர்களில் ஒழுக்கம் தவறி விடுவதற்கு இது தான் காரணம்.
ஒரு பெண் முகத்தையும் முழுமையாக மறைத்து விட்டால் அவள் யாரென்று அடையாளம் கண்டு கொள்வது கடினம். தன்னை யாருமே கண்டு கொள்ள மாட்டார்கள் எனும் போது அவள் ஒழுக்கம் தவறுவதற்கான துணிவைப் பெற்று விடுகின்றாள். எந்த ஆணுடன் அவள் தனித்துச் சென்றாலும் அவள் யாரென்று தெரியாததால் அவனுடைய மனைவியாக இருப்பாள் என்று உலகம் எண்ணிக் கொள்ளும். மற்றவர்கள் பார்த்து ரசிப்பார்கள் என்பதற்காக முகத்தையும் மறைத்துக் கொள்ளக் கட்டளையிட்டால் தவறு செய்யத் தூண்டுவதற்கு வழி செய்து கொடுக்கப்பட்டதாகவே ஆகும்.பெண்கள் தாம் என்று இல்லை. ஆண்கள் கூட முகமூடி அணிந்து எவரும் கண்டு கொள்ளாத வகையில் ஆடை அணிய அனுமதிக்கப்பட்டால் அவனது சுய ரூபமும் அப்போது வெளிப்படும். இறையச்சம் இல்லாவிட்டாலும் சமூகத்தைப் பற்றிய அச்சமாவது ஒழுக்கத்தைக் கடைப்பிடிக்கத் தூண்ட வேண்டும்.
தவறு செய்ய நினைப்பவர்கள் இந்த முகத்திரையைக் கேடயமாகப் பயன்படுத்திக் கொண்டு துணிச்சலாகச் செயல்படுகிறார்கள். எனவே தான் முகத்தை மறைக்குமாறு இஸ்லாம் கட்டளையிடவில்லை.
மார்க்கத்தில் முகத்தை மறைக்காமல் இருப்பதற்கு அனுமதி உள்ளது போல் முகத்தை மறைத்துக் கொள்ளவும் அனுமதி உள்ளது. அனுமதிக்கப்பட்ட காரியங்களின் மூலம் கேடுகள் ஏற்படுமானால் அந்தக் கேடுகளின் காரணமாக அதைத் தவிர்ப்பதும் மார்க்கத்தின் ஒரு அம்சமாகும். அதிகக் கொழுப்புள்ள உணவுகள் அனுமதிக்கப்பட்டவை என்றாலும் உடலுக்கு அது நல்லதல்ல என்றால் அதை நாம் தவிர்ப்பதே நல்லதாகும். பெண்கள் முகத்தை மறைப்பதால் ஏற்படும் கேடுகள் நமக்கு பளிச் சென்று தெரிகின்றன.
முகத்தை மறைத்துக் கொள்வதைக் கேடயமாகப் பயன்படுத்தி கூடாத செயலில் பெண்கள் ஈடுபடுதல்கேடுகெட்ட பெண்கள் போலீஸாரிடம் இருந்து தப்பிக்க முகம் மறைப்பதைக் கேடயமாகப் பயன்ப்டுத்திக் கொள்வதுஆண்கள் கூட பெண்களைப் போல் முகத்தை மூடிக் கொண்டு தீய கரியங்களில் ஈடுபடுவது இப்படி பலவாறான கேடுகள் ஏற்படும் போது எதைல் கேடு இல்லையோ அதைத் தான் நாம் தேர்வு செய்ய வேண்டும்.
முகம் மறைக்காமல் இருப்பதால் ஏற்படும் கேடுகளை விட மறைப்பதால் ஏற்படும் கேடுகள் மிக அதிகமாகும்.
முகத்தை மறைத்து ஆக வேண்டும் என்று மார்க்கத்தில் கட்டளை இருந்தால் அப்போது விளைவுகளை நாம் கவனிக்கக் கூடாது. இரண்டும் அனுமதிக்கப்பட்ட காரிய்ங்களில் மட்டும் எதில் கேடுகள் உள்ளதோ அதைத் தவிர்க்கத் தான் வேண்டும். இந்த அடிப்படையில் தான் பெண்கள் முகம் மறைப்பதைத் தவிர்க்க வேண்டும் என்று நாம் கூறுகிறோம்
- தவறான வாதங்களுக்கு சரியான விளக்கம் :
சகோதரர் தனது கருத்துக்கு அறிஞர்களின் கூற்றுக்களையும் ஆதாரமாகச் சுட்டிக் காட்டுகிறார். இவருடைய கருத்துக்கு மாற்றமாக பெண்கள் முகத்தை மறைக்க வேண்டியதில்லை எனவும் அதிகமான அறிஞர்கள் கூறியுள்ளனர். அறிஞர்களின் கூற்றுக்கள் மார்க்க ஆதாரமாக முடியாது என்பதால் இதில் நாம் மூழ்க வேண்டியதில்லை.
குர்ஆன் ஹதீஸ் ஆகிய இரண்டின் அடிப்படையில் மட்டும் அவர் எழுப்பிய வாதங்களுக்கு சரியான விளக்கத்தைப் பார்ப்போம்.
நபியே! (முஹம்மதே!) உமது மனைவியருக்கும், உமது புதல்வியருக்கும், (ஏனைய) நம்பிக்கை கொண்ட பெண்களுக்கும் முக்காடுகளைத் தொங்கவிடுமாறு கூறுவீராக! அவர்கள் (ஒழுக்கமுடைய பெண்கள் என்று) அறியப்படவும், தொல்லைப்படுத்தப்படாமல் இருக்கவும் இது ஏற்றது.'' அல்லாஹ் மன்னிப்பவனாகவும், நிகரற்ற அன்புடையோனாகவும் இருக்கிறான்.அல்குர்ஆன் (33 : 59)
கண்களைத் தவிர்த்து முகம் உட்பட உடலின் அனைத்து பாகங்களையும் மறைக்க வேண்டும் என்று இவ்வசனம் கூறுவதாகச் சகோதரர் வாதிடுகிறார்.
இவ்வசனத்தில் முகத்தை மறைக்க வேண்டும் என்று கூறப்படவில்லை. பொதுவாக முக்காடுகளைத் தொங்க விட வேண்டும் என்ற கட்டளை மட்டுமே இவ்வசனத்தில் இடப்படுகின்றது.திருக்குர்ஆனுக்கு விளக்கமாக ஹதீஸ்கள் அமைந்துள்ளன. இவ்வசனத்தில் கூறப்படும் முக்காடுகளால் மறைக்கப்பட வேண்டிய பகுதியில் முகமும் முன் கையும் அடங்காது என்றும் முகமும் முன்கையும் வெளிப்படுத்த அனுமதிக்கப்பட்ட பகுதி என்றும் மேலே நாம் சுட்டிக்காட்டிய ஹதீஸ்கள் தெளிவுபடுத்துகின்றன.
இதற்கு மாற்றமாக பெண்கள் முகத்தை மூட வேண்டும் என்பதே இவ்வசனத்தின் பொருள் எனக் கூறினால் பெண்கள் முகத்தை வெளிப்படுத்தலாம் எனக் கூறும் ஹதீஸ்களை மறுக்க வேண்டிய நிலை ஏற்படும். அல்லது திருக்குர்ஆன் வசனத்துக்கு மாற்றமான ஒரு காரியத்தை நபி (ஸல்) அவர்கள் அங்கீகரித்தார்கள் என்ற தவறான கருத்து உருவாகும். எனவே அந்த ஹதீஸ்களுக்கும் இந்த வசனத்துக்கும் முரணில்லாத வகையில் நாம் முன்பு கூறியவாறு விளங்குவதே சரி.
பெண்கள் தங்களுடைய கண்களை மட்டும் வெளிப்படுத்தலாம் என சகோதரர் மேற்கண்ட வசனத்துக்கு விளக்கம் அளித்துள்ளார். பெண்கள் கண்களை மட்டும் வெளிப்படுத்திக் கொள்ளலாம் என்று விதிவிலக்கு கொடுப்பதற்கு இவரது சுயவிருப்பத்தைத் தவிர இவ்வசனத்தில் வேறு எந்த ஆதாரமும் இல்லை.
எனவே இவ்வசனத்தில் நமது மனோ இச்சை அடிப்படையில் விதிவிலக்கு அளிப்பதை விட ஹதீஸ்கள் அடிப்படையில் பெண்கள் முகத்தையும் முன்கையையும் வெளிப்படுத்தலாம் என விதிவிலக்கு அளிப்பதே சரியானது.
மேற்கண்ட வசனத்தில் முக்காடுகள் என்று மொழி பெயர்த்துள்ள இடத்தில் ஜலாபீப் என்ற பன்மைச் சொல் இடம் பெற்றுள்ளது. ஜில்பாப் என்பது இதன் ஒருமையாகும்.
இவ்வசனம் இறங்கியவுடன் நபித்தோழியர்கள் தங்களுடைய முகங்களை துணியால் மறைத்துக் கொண்டதாக ஆயிஷா (ரலி) அவர்கள் இவ்வசனத்துக்கு விளக்கம் கூறினார்கள் என சகோதரர் கூறினார். ஆனால் இவர் கூறியது போல் புகாரியில் எந்தச் செய்தியும் இடம்பெறவில்லை.ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாக பின்வரும் செய்தி மட்டுமே புகாரியில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஸஃபிய்யா பின்த் ஷைபா (ரஹ்) அவர்கள் கூறினார்கள் :''(நபியே! இறைநம்பிக்கை கொண்ட பெண்கüடம் கூறுக:) அவர்கள் தங்களின் மார்புகள் மேல் தங்களின் துப்பட்டாவைப் போட்டு (மறைத்து)க் கொள்ளட்டும்'' எனும் (24:31ஆவது) வசனம் இறங்கிய போது பெண்கள் தங்கள் கீழ் அங்கிகளின் ஓரத்தைக் கிழித்து அதனைத் துப்பாட்டா ஆக்கி (மறைத்து)க் கொண்டார்கள்.புகாரி (4759)
33 : 59 வது வசனத்துக்கு விளக்கமாக ஆயிஷா (ரலி) அவர்கள் இந்தச் செய்தியைக் கூறியதாக சகோதரர் கூறினார். ஆனால் ஆயிஷா (ரலி) அவர்கள் அந்த வசனத்துக்கு இவ்வாறு விளக்கம் கூறவில்லை. மாறாக 24 : 31 ஆவது வசனத்துக்கே மேற்கண்டவாறு விளக்கம் அளித்துள்ளார்கள்.அவர்கள் அறிவித்துள்ள இந்தச் செய்தியில் முகத்தை மறைப்பது பற்றி எந்தத் தகவலும் இடம் பெறவில்லை. எனவே சகோதரர் இதைத் தவறுதலாக கூறியிருப்பார் என்றே நாம் நல்லெண்ணம் வைக்கின்றோம்.
- பலவீனமான செய்திகள் :
33 : 59 ஆவது வசனம் பெண்கள் தங்கள் முகங்களை மறைக்க வேண்டும் எனக் கூறுவதாக இப்னு அப்பாஸ் கூறினார்கள் என சகோதரர் கூறியிருந்தார்.இவ்வாறு இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாக இமாம் தப்ரீ அவர்கள் எழுதிய ஜாமிஉல் பயான் எனும் நூல் ஒரு செய்தி பதிவு செய்யப்பட்டுள்ளது.
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள் :நபியே! (முஹம்மதே!) உமது மனைவியருக்கும், உமது புதல்வியருக்கும், (ஏனைய) நம்பிக்கை கொண்ட பெண்களுக்கும் முக்காடுகளைத் தொங்கவிடுமாறு கூறுவீராக! அவர்கள் (ஒழுக்கமுடைய பெண்கள் என்று) அறியப்படவும், தொல்லைப்படுத்தப்படாமல் இருக்கவும் இது ஏற்றது.'' அல்லாஹ் மன்னிப்பவனாகவும், நிகரற்ற அன்புடையோனாகவும் இருக்கிறான்.அல்குர்ஆன் (33 : 59)
இறைநம்பிக்கையாளர்களின் பெண்கள் ஒரு தேவைக்காக தங்களுடைய வீடுகளிலிருந்து வெளியே செல்லும் போது அவர்கள் தங்கள் முகங்களை முக்காடுகளால் தலையின் மேற்புறத்திலிருந்து மூடிக் கொள்ள வேண்டும் என அல்லாஹ் (இவ்வசனத்தில்) அப்பெண்களுக்கு உத்தரவிடுகிறான்.நூல் : ஜாமிஉல் பயான்
இதன் அறிவிப்பாளர் தொடரில் அபூ ஸாஹ் என்பவர் இடம் பெறுகின்றார். அறிஞர்களின் கூற்றுப்படி இவர் பலவீனமானவர் ஆவார்.
இவர் அதிகம் தவறிழைப்பவர் என்று இமாம் இப்னு ஹஜர் கூறியுள்ளார். இவரிடம் பலவீனம் இருப்பதாக இமாம் தஹபீ தெரிவித்துள்ளார். இவர் நம்பகமானவர் இல்லை என இமாம் நஸாயீ தெரிவித்துள்ளார்.
இவ்வசனத்தின் விளக்கத்தை இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடமிருந்து அலீ பின் அபீ தல்ஹா என்பவர் அறிவிக்கின்றார். அலீ பின் அபீ தல்ஹா திருக்குர்ஆனின் விளக்கம் தொடர்பாக இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடமிருந்து எதையும் நேரடியாகச்செவியுறவில்லை என துஹைம் என்ற அறிஞர் கூறியுள்ளார்.
மேற்கண்ட செய்தி திருக்குர்ஆனின் விளக்கம் தொடர்பானதாகும். இதை இவர் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடமிருந்து நேரடியாக செவியுறவில்லை. இவருக்கும் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களுக்கும் இடையில் யாரோ விடுபட்டுள்ளார்கள். எனவே இச்செய்தியின் அறிவிப்பாளர் தொடரில் முறிவு இருப்பதாலும் அறிவிப்பாளர் அபூ ஸாஹ் பலவீனமானவர் என்பதாலும் இதை ஏற்றுக்கொள்ள முடியாது.
ஒரு பேச்சுக்கு இந்தச் செய்தி சரி என்று ஏற்றுக் கொண்டாலும் இதை ஆதாரமாக ஏற்றுக் கொள்ள முடியாது. ஏனென்றால் இவ்வசனத்துக்கு இவ்வாறு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் விளக்கம் கொடுக்கவில்லை. மாறாக இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களே விளக்கம் கொடுத்துள்ளார்கள். நபித்தோழர்கள் கூறும் விளக்கங்களை நாம் ஏற்க வேண்டும் என மார்க்கம் நமக்குக் கூறவில்லை. இந்த விளக்கம் பல நபிமொழிகளுக்கு மாற்றமாக இருப்பதால் இதை ஏற்றுக் கொள்ள முடியாது.
அடுத்து சகோதரர் பெண்கள் முகத்தை மறைக்க வேண்டும் என்பதற்குப் பின்வரும் செய்தியை ஆதாரமாகக் காட்டுகிறார்.
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் :(பெண்களாகிய) நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் இஹ்ராம் அணிந்த நிலையில் இருந்த போது ஒட்டகத்தில் பயணிப்பவர்கள் எங்களை கடந்து சென்றுகொண்டிருந்தார்கள். அவர்கள் எங்களுக்கு அருகில் வரும் போது தலையில் உள்ள முக்காட்டை முகத்தின் மீது போட்டுக் கொள்வோம். அவர்கள் எங்களை கடந்து சென்றுவிட்டால் முக்காட்டை அகற்றிக் கொள்வோம்.அபூதாவுத் (1562)
இந்த செய்தியில் யஸீத் பின் அபீ ஸியாத் என்பவர் இடம் பெறுகிறார். இவர் பலவீனமானவர் என்று இமாம் அஹ்மது பின் ஹம்பள், இமாம் யஹ்யா பின் முயீன், இமாம் அபூ சுர்ஆ, இமாம் அபூ ஹாதிம், இமாம் இப்னு அதீ ஆகியோர் கூறியுள்ளனர். எனவே இது பலவீனமான செய்தி.
ஒரு பேச்சுக்கு இந்தச் செய்தியை ஏற்றுக் கொண்டால் கூட இதை வைத்து பெண்கள் முகத்தைமூடுவது கட்டாயம் என்று கூற முடியாது. ஏனென்றால் இந்தச் செய்தியில் ஆண்கள் பெண்களைக் கடந்து செல்லும் போது பெண்கள் முகத்தை மூட வேண்டும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உத்தரவிடவில்லை. நபித்தோழியர்களே சுயமாகவே இவ்வாறு செய்கின்றனர்.
எனவே அதிகபட்சமாக இந்தச் செய்தியை வைத்து பெண்கள் முகத்தை மூடுவது தவறல்ல என்று வாதிடமுடியுமே தவிர முகத்தை அவசியம் மூட வேண்டும் என்று வாதிட முடியாது. எனவே இது நமக்கு எதிரான ஆதாரமல்ல.
- ஆதாரத்திற்கு தகுதியற்றவை :
குர்ஆன் ஹதீஸ் ஆகிய இரண்டு மட்டுமே மார்க்கப் பிரச்சனைகளுக்கு ஆதாரங்களாக எடுத்துக் கொள்ளப்படும். இதை விடுத்து நபித்தோழர்களின் கூற்றுக்களையோ அவர்களுக்குப் பின்னால் வந்தவர்களின் கூற்றுக்களையோ ஆதாரமாக எடுத்துக் கொள்ள முடியாது.
ஆனால் சகோதரர் பெண்கள் முகத்தை மூட வேண்டும் என்பதற்கு நபித்தோழர்களின் கூற்றுக்களையும் அவர்களுக்குப் பின்னால் வந்தவர்களின் கூற்றுக்களையும் ஆதாரமாக காட்டியுள்ளார்.
இப்னு சீரீன் (ரஹ்) அவர்கள் கூறினார்கள் :நபியே! (முஹம்மதே!) உமது மனைவியருக்கும், உமது புதல்வியருக்கும், (ஏனைய) நம்பிக்கை கொண்ட பெண்களுக்கும் முக்காடுகளைத் தொங்கவிடுமாறு கூறுவீராக! என்ற வசனம் குறித்து நான் உபைதா பின் அம்ர் (ரஹ்) அவர்களிடம் வினவினேன். அதற்கு அவர்கள் தனது ஆடையைக் கொண்டு தனது இரு கண்களில் ஒன்றை மட்டும் வெளிப்படுத்தி தன் தலையையும் முகத்தையும் மூடிக்காட்டி(இவ்வாறு பெண்கள் முக்காடு அணிய வேண்டும் என்று கூறி)னார்கள்.நூல் : ஜாமிஉல் பயான்
முகத்தில் ஒரு கண்ணை மட்டும் திறந்து மற்ற அனைத்தையும் மூட வேண்டும் எனக் கூறிய அம்ர் என்பவர் நபித்தோழர் அல்ல. தாபியீன் ஆவார். இவ்வசனத்துக்கு இவர் கூறிய விளக்கம் பெண்கள் முகத்தைத் திறக்கலாம் என்று கூறும் ஹதீஸ்களுடன் முரண்படுகின்றது. இவ்விளக்கத்தை இவர் சுயமாகத் தெரிவிக்கின்றார். எனவே இதை ஏற்க வேண்டிய அவசியம் இல்லை.அடுத்து சகோதரர் பின்வரும் செய்தியை ஆதாரமாகக் காட்டியுள்ளார்.
ஃபாத்திமா பின்த் முன்திர் (ரஹ்) அவர்கள் கூறினார்கள் :நாங்கள் இஹ்ராம் அணிந்திருந்த நிலையில் அஸ்மாஉ பின்த் அபீ பக்ர் சித்தீக் (ரலி) அவர்களுடன் இருந்த போது நாங்கள் எங்கள் முகங்களை மறைத்துக் கொள்வோம்.நூல் : மாக் (634)
நபித்தோழர்களின் கூற்றுக்களே ஆதாரமாக முடியாது என்கிற போது அவர்களின் அங்கீகாரங்களை ஆதாரமாக எடுக்கவே முடியாது. அஸ்மாஉ (ரலி) அவர்கள் முந்நிலையில் பெண்கள் முகத்தை மூடியுள்ளதால் இதிலிருந்து எப்படி மார்க்க சட்டத்தை எடுக்க முடியும்?
மேலும் இந்தச் செய்தி நபி (ஸல்) அவர்களின் கூற்றுக்கு எதிராக உள்ளது. இஹ்ராம் அணிந்த பெண்கள் முகத்தை மறைக்கக் கூடாது என நபி (ஸல்) அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள். இந்த ஹதீஸை முன்பே பார்த்தோம்.
ஒரு பேச்சுக்கு இந்தச் செய்தியை ஆதாரமாக ஏற்றால் கூட இஹ்ராம் அணிந்த நிலையில் பெண்கள் முகத்தை மூடிக் கொள்ள அனுமதி உண்டு என்று தான் விளங்க முடியும். பெண்கள் எல்லா நேரத்திலும் முகத்தைக் கட்டாயம் மூட வேண்டும் என்ற கருத்தை இச்செய்தி தரவில்லை.எனவே பெண்கள் முகத்தை மூடுவது வாஜிப் (கட்டாயம்) என்ற கருத்துக்கு இது ஆதாரமாக முடியாது.
அடுத்து சகோதரர் பின்வரும் செய்தியை பெண்கள் அவசியம் முகத்தை மூட வேண்டும் என்பதற்கு ஆதாரமாக காட்டுகிறார்.
அஸ்மாஉ (ரலி) அவர்கள் கூறினார்கள் :நாங்கள் ஆண்களிடமிருந்து எங்கள் முகங்களை மறைத்துக் கொள்வோம். இதற்கு முன்பே தலைவாரிக் கொள்வோம்.நூல் : ஸஹீஹு இப்னி குஸைமா
இந்தச் செய்தியும் நாம் முன்பு கூறிய செய்தியைப் போன்றே அமைந்துள்ளது.பெண்கள் முகத்தை மறைக்கலாம் என்று தான் இந்த செய்தி கூறுகின்றது. அவசியம் மறைக்க வேண்டும் என்று கூறவில்லை. ஆனால் பெண்கள் முகத்தை மூடுவது கட்டாயம் என்பது சகோதரரின் வாதமாகும்.
பெண்கள் முகத்தை மறைப்பது கூடாது என்று நாம் கூறவில்லை. இவ்வாறு செய்வது மார்க்கத்தில் வலியுறுத்தப்படவில்லை. மறைக்காமல் வெளிப்படுத்தினால் குற்றமில்லை என்றே கூறுகிறோம். எனவே இது நமது கருத்துக்கு எதிரான செய்தியல்ல. மாறாக பெண்கள் முகத்தை மறைக்க அனுமதியுண்டு என நாம் கூறும் கருத்துக்கு ஆதாரமாக உள்ளது.
- கிமார் என்றால் என்ன ?
தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும் தமது கற்புகளைப் பேணிக் கொள்ளுமாறும் நம்பிக்கை கொண்ட பெண்களுக்குக் கூறுவீராக! அவர்கள் தமது அலங்காரத்தில் வெளியே தெரிபவை தவிர மற்றவற்றை வெளிப்படுத்த வேண்டாம். தமது முக்காடுகளை மார்பின் மேல் போட்டுக் கொள்ளட்டும்.அல்குர்ஆன் (24 : 31)
முக்காடுகள் என நாம் மொழிபெயர்த்துள்ள இடத்தில் குர்ஆனில் கும்ரு என்ற அரபுச் சொல் இடம் பெற்றுள்ளது. கிமார் என்பது இதன் ஒருமைச் சொல்லாகும். கிமார் என்றால் முகம் உட்பட தலையை மறைக்கும் ஆடை என சகோதரர் வாதிடுகிறார். இவ்வாறு இப்னு ஹஜர் இவ்வார்த்தைக்கு விளக்கம் கொடுத்ததாகவும் சுட்டிக் காட்டுகிறார்.
இவ்வசனத்தில் முக்காடுகளை மார்பின் மீடு போட்டுக் கொள்ள வேண்டும் என்றே கூறப்பட்டுள்ளது. முகத்தின் மீது போட வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தாலே முகத்தை மறைக்க வேண்டும் என்பதற்கு இவ்வசனத்தை ஆதாரமாகக் காட்டலாம். ஆனால் அவ்வாறு கூறப்படவில்லை என்பதால் இதை முகத்தை மறைக்க ஆதாரமாகக் காட்ட முடியாது.
கிமார் என்றால் முகத்தை மூடும் ஆடை என்ற கருத்து தவறானது. தலையை மறைக்கும் துணி என்பதே இதன் சரியான பொருள். இவ்வாறே அரபு அகராதி நூற்களிலும் ஹதீஸ்களிலும் கூறப்பட்டுள்ளது.
அல்முஃஜமுல் வசீத் மற்றும் லிசானுல் அரப் ஆகிய அகராதி நூற்களில் பெண்களின் கிமார் என்பது அவர்கள் தங்களுடைய தலையை மறைத்துக் கொள்ளும் துணிக்குச் சொல்லப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.
இமாம் இப்னு ஹஜர் அவர்கள் கிமார் என்பதற்கு தனது நூலான ஃபத்ஹுல் பாரியில் அது ஆண்கள் அணியும் தலைப்பாகையைப் போன்றது எனக் கூறுகிறார். அதாவது ஆண்கள் தங்களது தலையை மறைக்க தலைப்பாகையைப் பயன்படுத்துவது போல் பெண்கள் தங்களது தலையை மறைக்க கிமாரைப் பயன்படுத்துவார்கள் என்று கூறுகிறார். தலைப்பாகை என்பது முகத்தை மறைக்கும் ஆடையல்ல. எனவே கிமார் என்பது முகத்திரை அல்ல. தலைத்துணி தான் என்பது இதிலிருந்து தெளிவாகின்றது.
ஹதீஸ்களில் கிமார் என்பது தலைத்துணி என்ற அர்த்தத்திலேயே பயன்படுத்தப்பட்டுள்ளது.
நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள் :மாதவிடாய் (ஏற்படும் பருமடைந்த) பெண்ணின் தொழுகையை முக்காடுடன் (அவள் தொழுதாலே) தவிர அல்லாஹ் ஏற்றுக் கொள்ள மாட்டான்.இதை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.அபூதாவுத் (5460
பெண்கள் தொழும் போது முக்காடுடன் தொழ வேண்டும் என்று இந்த ஹதீஸ் கூறுகின்றது. முக்காடு என்று மொழிபெயர்த்துள்ள இடத்தில் ஹதீஸில் கிமார் என்ற வார்த்தை இடம் பெற்றுள்ளது. கிமார் என்றால் அது முகத்தை மூடும் ஆடை என தவறான பொருளை இங்கே பொறுத்தினால் பெண்கள் தொழுகையின் போது முகத்தை மூடுவது கட்டாயம் என்ற தவறான முடிவு ஏற்படும்.
உக்பா பின் ஆமிர் (ரலி) அவர்கள் கூறினார்கள் :எனது சகோதரி காலணி அணியாமலும் கிமார் (தலைத் துணி) அணியாமலும் ஹஜ் செய்வதாக நேர்ச்சை செய்துள்ளார் என்று நான் நபி (ஸல்) அவர்களிடம் (கூறி இது பற்றி) வினவினேன். அதற்கு அவர்கள் உங்களுடைய சகோதரிக்கு நீங்கள் உத்தரவிடுங்கள். அவர் தலைத் துணி அணிந்து கொள்ளட்டும். வாகனத்தில் ஏறி வரட்டும். அவர் மூன்று நாட்கள் நோன்பு நோற்க வேண்டும் என்று கூறினார்கள்.அபூதாவுத் (2865)
ஹஜ் செய்யும் பெண்கள் முகத்தை மூடக்கூடாது என நபி (ஸல்) அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள். இந்த ஹதீஸை முன்பே பார்த்து விட்டோம். மேற்கண்ட ஹதீஸில் கிமார் அணிய வேண்டும் என நபி (ஸல்) அவர்கள் உக்பா பின் ஆமிர் (ரலி) அவர்களின் சகோதரிக்கு உத்தரவிட்டுள்ளார்கள்.
கிமார் என்பது முகத்தை மறைக்கும் ஆடையாக இருந்தால் முகத்தை மறைக்கக் கூடாத இடமான ஹஜ்ஜில் கிமாரை அணியுமாறு நபி (ஸல்) அவர்கள் உத்தரவிட்டிருக்க மாட்டார்கள்.
கிமார் என்பது தலையை மட்டும் மறைக்கும் துணி என்பதாலே இதை ஹஜ்ஜின் போது அணியுமாறு நபியவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள்.
எனவே பெண்கள் முகத்தைக் கட்டாயம் மறைக்க வேண்டும் என்பதற்கு ஏற்கத் தகுந்த எந்த ஆதாரமும் இல்லை. பெண்கள் முகத்தை மறைப்பதற்கும் மறைக்காமல் இருப்பதற்கும் அனுமதியுள்ளது.
தற்காலத்தில் முகத்தை மறைப்பதால் தீமைகள் அதிகம் ஏற்படுகின்றது. எனவே இத்தீமைகளை தடுக்கும் விதமாக முகத்தை மறைப்பதைக் காட்டிலும் மறைக்காமல் இருப்பது சிறந்தது.
இது குறித்து வீடியோ ஆடியோ வடிவில் பதில் அறிய இங்கே கிளிக் செய்யவும்
0 comments:
Post a Comment